SSC How to easily succeed in the exam? 

 

 
 
எஸ்.எஸ்.சி. தேர்வில் சாதிப்பது எப்படி?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது.


இந்த தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...


முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.


இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு
நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.


முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.


உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

தினமும் பயிற்சி

எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆங்கிலம்

பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள் 

 
 நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

கணிதம்

கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

ரீசனிங்

இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

பொது அறிவுப் பகுதி 

 
 இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

பயம் தவிர்ப்போம் 

 

 
 எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்