2019-20ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 3 அரசு பள்ளிகளுக்கு விருது! 


2019-20ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான விருதை 3 பள்ளிகளுக்கு சென்னை கலெக்டர் விஜயா ராணி வழங்கினார். தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் சென்னை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், அந்தந்த மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கு விருது வழங்கப்படும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் செயல்வழிக் கற்றல் சிறப்பாக மேற்கொள்ளுதல், மாணவர் சேர்க்கை அதிகரிக்க செய்தமை போன்ற காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் செயல்படும் 379 பள்ளிகளில் 15 பள்ளிகளிலிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டது. இதில் ராயப்பேட்டை பாலாஜி நகர் சென்னை நடுநிலைப்பள்ளி, வடபழனி சென்னை நடுநிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி என 3 பள்ளிகள் 2019-20ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேர்வு செய்யப்பட்டன. இந்த 3 பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி கேடயங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இரா.சி.ஸ்ரீபிரியா, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தி.நகர் சரகம் வீரபாமா, மயிலாப்பூர் சரகம் அபிபூர் ரகுமான், தலைமை ஆசிரியைகள் தேன்மொழி, பொன்னம்மாள், பியூலா ஆகியோர் உடனிருந்தனர்.