அரசு பணியில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு, ஓய்வு வயது அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு!


தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான வருடாந்திர தேர்வு அட்டவணை முதலில் திட்டமிடப்பட்டு வெளியிடப்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் தேர்வர்கள் அரசு பணிக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு பணிக்கான தகுதி மற்றும் வயது வரம்புகளையும் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த வயது வரம்புகளை தளர்த்துவது குறித்து அரசுக்கு பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

தற்போது அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 32 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு பணியாளர்களின் ஓய்வு வயது தொடர்பான புகார்கள் இருந்து வந்த நிலையில், திமுக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசின் அறிவிப்பில், அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அடிப்படை விதி 56ல் திருத்தம் செய்து 59 ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பணிக்கு முயற்சி செய்யும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.