தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுக்கு சுழற்சி முறையில்  வகுப்புகள் நடத்த திட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி


சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் 50% மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தியாகராய நகரில்

சென்னை நூலகச் சங்கத்தை சேர்ந்த நூலகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 'மாவட்ட நூலகங்கள் வாரியாக என்னென்ன தேவைகள், புதிதாக கட்டிடங்கள் தேவைப்படுகிறதா, புத்தகங்கள் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறது போன்ற அறிக்கைகளை கேட்டு கேட்டுள்ளோம். நூலகத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்கிற வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் தேவைகளை அறிந்து சரி செய்யும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.

 தொடர்ந்து பேசிய அவர், செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி திறக்கப்படும் போது 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், முன்னேற்பாடுகள் என்ன என்பது பற்றிய கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டே அதனைப்பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பற்றி கலந்தாலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அன்பில் மகேஷ், நீட் தேர்வுக்கு கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் ஜனவரி மாதத்திலிருந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.