தமிழக அரசின் காப்பீடு திட்டம் முழு விளக்கம் NHIS 2021 சாதக & பாதகங்கள் :  தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.


தமிழகத்தில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.அதைத் தொடர்ந்து, 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்துடன் இணைந்து, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.


இந்த திட்டம், 2025 ஜூன் 30 வரை, நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான மாத சந்தா 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால், ஒருவரிடம்மட்டுமே சந்தா வசூலிக்கப்படும். காப்பீடு தொகை 4 லட்சம் ரூபாய் என்பது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற வற்றுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 7.50 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாயாகவும்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறுவோர், தற்காலிக பணியாளர்கள் போன்றோருக்கு, இத்திட்டம் பொருந்தாது.


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 203 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு 1,163 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.இத்திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற முடியும். திருமணமாகாத ஊழியர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர் பயன்பெறலாம்.