படிப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாணவனுக்கு சார்ஜா அரசின் விருது.



படிப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுவை மாணவனுக்கு சார்ஜா அரசின் விருது வழங்கப்பட்டது. சார்ஜா அரசின் விருது சார்ஜா அரசின் கல்விக் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சிறப்பாக படித்து வரும் மாணவர்களை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம். அதன்படி, தற்போது 27-வது ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடத்தை சேர்ந்த 59 மாணவ, மாணவிகளுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


இந்த ஆண்டு 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் சிறந்த முறையில் படித்து வரும் 3 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
6-ம் வகுப்பு மாணவன் இதில் புதுவையை சேர்ந்த மாணவன் அமித் சர்மா (வயது 10) என்ற மாணவருக்கு சார்ஜா அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை சார்ஜா கல்வி கவுன்சிலின் தலைவர் டாக்டர் சயீத் அல் காபி வழங்கினார். இது மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக, 2021-ம் ஆண்டுக்கான ‘டயானா விருதும்’ இந்த மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாணவன் அமித் சர்மா சார்ஜாவில் உள்ள நியூ டெல்லி தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இவரது பெற்றோர் ஸ்ரீராம் மற்றும் ஹேமா ஆகியோர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த விருது பெற்ற மாணவருக்கு பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த விருது குறித்து சார்ஜா கல்வி கவுன்சிலின் பொதுச் செயலாளர் முகம்மது அல் முல்லா கூறும்போது, ‘‘இந்த ஆண்டு 799 விண்ணப்பங்கள் மாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்பட்டது. அதில் இருந்து 59 பேர் விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்’’ என்றார்.