ஸ்மார்ட்போன், அதிவேக இணையம் தேவைப்படாத ஆன்லைன் கல்வி ரேடியோ: அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் 


கற்றுக்கொள்ள நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொள்வார் என்பது பழைய மொழி. அதேபோல கற்றுக்கொடுக்க நினைப்பவர் எந்த சூழ்நிலையிலும் கற்றுக்கொடுக்கலாம் என்னும் புது மொழியை கரோனா காலம் சாத்தியமாக்கி உள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு, தனியார் என அனைத்துப் பள்ளி மாணவர்களுமே ஆன்லைன் மூலம் படிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகி விட்டனர். இதில் இணைய வசதி இல்லாத விளிம்புநிலை மாணவர்கள், தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களின் நிலை தொடக்கம் முதலே கேள்விக்குறியாக இருந்து வந்தது. நகரங்களில் இணைய வசதி எளிதில் கிடைத்தாலும் அதைப் பெறத் தேவையான செல்போன், டேப் அல்லது கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்க முடியாமல் ஏராளமான மாணவர்கள் அவதிப்பட்டனர்.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்த மாணவர்களில் சிலரும், செல்போன், கணினித் திரையை நீண்ட நேரம் கவனிப்பதால் சில பிரச்சினைகளுக்கு ஆளாகினர்.

இந்தச் சூழலில், சாதாரண போனில் மிகக்குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவைத் தொடங்கி அதன் மூலம் மாநிலம் முழுவதும் கற்பித்தலை நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார் கடலூர் மாவட்டம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா. இந்த ரேடியோவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகின்றன.

எப்படி இந்த யோசனை வந்தது என்று அவரிடம் கேட்டபோது, ''கல்வித் தொலைக்காட்சி வந்தபோதே இதை ரேடியோ மூலமும் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதற்கான தேவை இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பெரிதாக மெனக்கெடவில்லை. ஆனால், கரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவுக்கான தேவை இருப்பது புரிந்தது.

ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கேட்கலாம்

எங்கள் பள்ளி மாணவர்களுக்காக நான் இதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கினேன். அப்போது பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 10- 15 பேர் மட்டுமே கேட்கும் வகையில் கல்வி ரேடியோவைத் தொடங்கினேன். காரணம் ஆன்லைன் ரேடியோ பற்றி எனக்கும் அப்போது தெரியாது. டிவி, ரேடியோ என்பதெல்லாம் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால், ஆன்லைனிலேயே ரேடியோ தொடங்கலாம் என்பது தெரிய வந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இணையத்தின் மூலம் அடுத்தடுத்த வசதிகளைத் தெரிந்துகொண்டேன். இப்போது ஒரே நேரத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் எங்கள் ரேடியோவைக் கேட்கலாம்'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.

முதலில் தொடங்கியபோது தன்னுடைய பள்ளியில் அவர் பாடம் எடுக்கும் 3, 4ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ரேடியோ மூலம் கற்பித்துள்ளார். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பதிவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பிற ஆசிரியர்களையும் ரேடியோ மூலம் அவர்கள் வகுப்புக்கான கற்பித்தல் பணியில் இணைத்துள்ளார். தற்போது 75 ஆசிரியர்கள் இந்த வகைக் கற்றலில் தன்னார்வத்துடன் இணைந்து கற்பித்தலை நிகழ்த்தி வருகின்றனர்.