பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு. அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு..!
 
"பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக, அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும்" என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை ஒளிபரப்ப கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி, 2 முதல் 12ம் வகுப்பு வரையான பாடங்களின் புதிய காணொலிகள் தயாரிக்கப்பட்டது. இந்த பாடங்களின் ஒளிபரப்பு நிகழ்வை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் கடந்த 19ம் தேதி காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, "10 மற்றும் 1-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஒலி வடிவிலான பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று (5ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இணைய சேவை குறைவாக உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளளதாக இருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக மொத்தம் 80 நிமிடங்கள் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளது.

முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும், அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.