'நீட்' தேர்வு ஒத்திவைப்பு? செப்டம்பரில் நடக்க வாய்ப்பு!

 

 



'மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்படலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. 'உள்மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இம்மாதம் 31ல் முடிவுகள் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

விண்ணப்பம்இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்தன. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுதும் காத்திருக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பரில் நடத்தப்பட்டது. தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டன. 'நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, ஆக., 1ல் நடக்கும்' என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலைக்கு பின், நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ., மெயின் எனப்படும், முதன்மை தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது.பொதுவாக நீட் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நாளில் இருந்து, தேர்வு தேதிக்கு இடையே 60 நாட்கள் இடைவெளி வழங்கப்படுவது வழக்கம்.

தேர்வு மைய அனுமதி, இருக்கைகள் அமைத்தல், அனுமதி அட்டை வழங்குதல், விண்ணப்பங்களில் மாற்றம் செய்ய அவகாசம் போன்ற பணிகளுக்காக தேசிய தேர்வு முகமை இந்த கால அவகாசத்தை வழங்குகிறது.எதிர்பார்ப்புஇந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி குறித்து, மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.

நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நீட் தேர்வுக்கான தேதியை செப்., வரை ஒத்திவைக்க, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், நீட் மற்றும் ஜே.இ.இ., முதன்மை தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புஉள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.