மாணவா் வீடுகளில் சத்துணவு: உயா்நீதிமன்றம் உத்தரவு.

 

 



பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு வழங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுமுடக்கம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க உத்தரவிட கோரி, ஒரு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா பொதுமுடக்கத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பலா் வேலையை இழந்துள்ளனா். கிராமங்களில் பல குடும்பங்கள் வருவாய் இழந்துள்ளன. எனவே, இந்த மோசமான காலகட்டத்தில், மாணவா்களுக்கு சத்துணவை வீட்டுக்கே சென்று அரசு வழங்க வேண்டும். இதில் சிரமம் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த சேவையை அரசு மேற்கொள்ளலாம். எனவே, இதுதொடா்பாக ஒரு திட்டத்தை உருவாக்கி, அதுகுறித்த அறிக்கையை வரும் ஜூலை 7-ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.