கல்வித் தொலைக்காட்சியில் ஆங்கில வழியிலும் பாடங்கள்: பள்ளிக் கல்வித்துறை தகவல்கல்வித் தொலைக்காட்சியில் ஆங்கிலவழியிலும் பாடங்களை ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பாண்டு பள்ளி திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுப்பள்ளித் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான பாடங்கள் காணொலிகளாக வடிவமைக்கப்பட்டு தினமும் சுழற்சி முறையில் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதுதவிர பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பாடங்கள் ஒலிவடிவிலும் தயாா் செய்யப்பட்டு வானொலி மூலம் ஒலிபரப்பாகின்றன. இதன்காரணமாக தடையின்றி மாணவா்கள் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சியில் தமிழ்வழி பாடங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஆங்கில வழியிலான பாடங்கள் ஒளிபரப்பு குறித்து எவ்வித அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை. இதனால் ஆங்கில வழியில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி பயில்வதில் சிக்கல் நிலவுவதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆங்கில வழியிலும் பாடங்களை ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்தினா்.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கல்வித் தொலைக்காட்சியில் ஆங்கில வழிப் பாடங்கள் ஒளிபரப்புக்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பத்தாம் வகுப்புக்கு காணொலிகள் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இதர வகுப்புகளுக்கு காணொலிகள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் அனுமதி கிடைத்தபின் கல்வித் தொலைக்காட்சியில் ஆங்கில வழிப் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்தனா்.