4- மாதமாக முடங்கிய ஆசிரியர் தேர்வு வாரியம்!
கலைப்பதா, நடத்துவதா என்ற குழப்பத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள், நான்கு மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. ஆசிரியர் நியமன பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, T.N.P.S.C., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, T.R.B., வாயிலாக நியமனம் நடந்து வருகிறது.
தனி ஆணையம்
இந்நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல்வந்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கைகள், மார்ச்சில் நிறுத்தப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகளை காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சட்டசபை தேர்தல் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., அரசு அமைந்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகள் துவங்கவில்லை.
அதேநேரம், T.N.P.S.C.,யின் பணி நியமன நடவடிக்கைகள்துவங்கி, ஒவ்வொரு தேர்வாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள் கூறியதாவது:தேர்தல் அறிவிக்கும் முன்னரே, T.R.B.,யில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், உயர்கல்வி துறைக்கு பணி நியமனம் மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்படும் என, அப்போதைய உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். செயல்பாடுகள் முடக்கம்பின், தேர்தல் காரணமாக T.R.B.,யின் பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது புதிய ஆட்சி அமைந்த பின், உயர்கல்விக்கான பணி நியமனங்களை, T.N.P.S.C., வழியே நடத்த உள்ளதாக, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடிகளால் அதை நடத்துவதா, கலைப்பதா என, தமிழக பள்ளி கல்வித்துறை தெளிவான முடிவு எடுக்கவில்லை.இதனால், மார்ச் முதல் தற்போது வரை T.R.B.,யின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.
பேராசிரியர் பணிகளுக்குஏற்கனவே, நேர்முக தேர்வு முடிந்த பிறகும் பட்டியல் வெளியிடப்பட வில்லை. ஆசிரியர் பணி தேர்வுகளுக்கு தயாரான, பட்டதாரிகளும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
Post a Comment