அரசாணை பிறப்பித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் பணிநிரந்தரம் செய்ய வில்லை. தவிக்கும் ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள்.


 நான்கு ஆண்டுகளாக பணி நிரந்தர அரசாணை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு நேரத்திலும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். தேசிய வேலை உறுதி திட்டம் 2005 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த பணிகளை கண்காணிக்கவும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கணினி உதவியாளர்கள் 2007 ஆம் ஆண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிய அலுவலகங்களில் நியமிக்கப்பட்டார்கள். 2008ஆம் ஆண்டு ஓவர்சீயர்கள் மட்டும் பணி நிரந்தரம் செய்யப் பட்டார்கள்.

 ஆனால் கணினி உதவியாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களாகவே உள்ளனர். தற்போது 1, 843 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து 2017 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணையை 4 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட வில்லை என்றும் தற்போது ஊரடங்கு நேரத்திலும் தேசிய வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் , கணினி உதவியாளர் களும் 100% பணிபுரிந்து வருவதாகவும் இந்த சமயத்திலாவது தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளார்கள்.

 இதுகுறித்து கணினி உதவியாளர்கள் கூறுகையில் எங்களுடன் பணியில் சேர்ந்த ஓவர்சீயர்கள்  பணிநிரந்தரம் செய்து பலர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் ஆனால் நாங்கள் மட்டும் 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதாகவும்  எனவே பணிநிரந்தரம் செய்ய  அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.