முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பெறுதற்கான படிவம் மற்றும் அதன் விவரம்


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் அதனை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சொல்லி தமிழக அரசு உத்தரவு போட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் என்றால் என்ன அதுல எப்படி நாம் சேரலாம்.? 2009 இல் அப்போதைய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது அது போக மத்திய அரசு சார்பாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா ஒரு திட்டமும் 2018 ல இந்த காப்பீட்டுத் திட்டம் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு வருஷத்துக்கு 5 லட்சம் காப்பீட்டுத் திட்டம் பெற முடியும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தபட்டு வருகிறது.

திட்டத்தின் பயன்கள்:

அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் மற்றும் தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கு தகுதி

இந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்
தகுதியுடைய நபரின் குழந்தைகள்
தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி.?

இந்தத் திட்டத்தை ஆன்லைன் மூலம் பெற முடியாது கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து வருமான வரி சான்றிதழ் பெற வேண்டும் பிறகு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு அட்டை வழங்கும் மையம் என்ற இடத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை கொடுத்து இதற்கு விண்ணப்பிக்கலாம் இதை விண்ணப்பம் செய்த உடன் நமக்கு ஒரு இன்சூரன்ஸ் நம்பர் கொடுக்கப்படும் அதை வைத்து நாம் மருத்துவத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொள்ளலாம் இதை தவிர்த்து வேறு ஏதாவது சந்தேகமிருந்தால் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:
வருமான வரி சான்றிதழ்
ரேஷன் கார்டு ஜெராக்ஸ்
குடும்பத் தலைவரிடமிருந்து சுய அறிவிப்பு வடிவம்
வோட்டர் ஐடி, ஆதார் ஐடி போன்ற எதாவது ஒரு ஆதாரம்
உங்களுடைய முகவரி ஆதாரம்