பணிக்காக மதம் மாறியவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு. 


பல்கலைக்கழகங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பணி நியமனம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கபட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வி தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்யக் கோரி  ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.




 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘‘தன் கல்வித்தகுதி சான்றிதழை பல்கலைக்கழக விசாரணையின் போது கவுதமன் தாக்கல் செய்யவில்லை.  உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும்  சட்டவிரோதமானது. தகுதியில்லாத கவுதமனை ஓய்வுபெற அனுமதித்தது தவறானது.



அவரை நியமனம் செய்ய பரிந்துரைத்த தேர்வுக் குழுவிற்கு எதிராக பாரதியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும் போது வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.  



கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விபரங்களை பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும். பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது அது குறித்து  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து முடிவெடுக்க வேண்டும்.



நேர்முகத்தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால் அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.


போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து  இருப்பதாக கண்டறிந்தால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ்  பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.