பிளஸ் 2 பொதுதேர்வு குறித்த கருத்து கேட்பு: நாளை( 05.06.2021)அறிக்கை தாக்கல்.


 பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அடங்கிய அறிக்கை, நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்பின், பிளஸ் 2 தேர்வு ரத்தாகுமா அல்லது நடக்குமா என்பது குறித்த அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.


கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்து, பிரதமர் மோடி அறிவித்தார்.


மாநில அரசு பாட திட்டங்களில், தேர்வை ரத்து செய்வது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க, தமிழக அரசு தீர்மானித்தது.


அதன்படி, நேற்று முதல் கருத்து கேட்புகள் துவங்கின. தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதிகள் போன்றோர், மாவட்ட ரீதியாக தங்கள் கருத்து களை, பள்ளி கல்வி அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.


ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்கள் வழியே, மாணவர்களை போனில் தொடர்பு கொண்டு, தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா; வேறு எந்த வழியில் தேர்வை நடத்தலாம் என, நேற்று கருத்து கேட்கப்பட்டது.இந்த கருத்துகள் அனைத்தும், பள்ளி வாரியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்படுகின்றன. அவை மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு, இன்று பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட உள்ளன.


மாநில அளவில் ஆசிரியர் சங்கம், மாணவர் சங்கம், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோருடனும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரிடமும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கூட்டம் நடத்தி, இன்று கருத்துகள் கேட்கப்பட உள்ளன.

அறிக்கை தாக்கல்


கருத்துகளை கேட்டபின் முக்கிய அம்சங்களை தொகுத்து, தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, எந்த விதமான கருத்துகள் வந்துள்ளன என, நாளை முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.இதற்கான பணிகளை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னையில் தங்கியிருந்து இன்றும், நாளையும் மேற்கொள்ள உள்ளார்.


பின், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதா அல்லது நடத்துவதா என்பது குறித்தும், ரத்து செய்தால், மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


'மதிப்பெண் வழங்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியாகவில்லை'


தஞ்சாவூரில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து குறித்து, மற்ற மாநிலங்கள் போல அறிவிக்க முடியாது. இது, மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விஷயம். பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒரு சில மாநிலங்களில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட தேர்வுக்காக மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் அமைப்பு, பெற்றோர் நல சங்கத்தினர், மருத்துவ நிபுணர்கள் குழு ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.


இதில் எடுக்கும் முடிவுகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நாளை 5ம் தேதி, தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சி.பி.எஸ்.இ., தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, 'நீட்' தேர்வை ரத்து செய்ய அறிவிப்பு வெளியிடவில்லை. ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.