ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் என்னென்ன? 5-ம் தேதி முதல் வினியோகம் .


சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தனது முதல் கையெழுத்தாக தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். அதன் படி, தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக 4000 அறிவிக்கப்பட்டது.

அதன் முதல் தவணையாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2000 வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், பொது மக்கள் யாரும் பசி, பட்டினியில் வாடாமல் இருக்க, தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பின் படி,

    கோதுமை மாவு- 1 கிலோ,
    உப்பு- 1 கிலோ,
    ரவை- 1 கிலோ,
    சர்க்கரை- 500 கிராம்,
    உளுத்தம் பருப்பு- 500
    கிராம், புளி- 250 கிராம்,
    கடலை பருப்பு- 250 கிராம்,
    கடுகு- 100 கிராம்,
    சீரகம்- 100 கிராம்,
    மஞ்சள் தூள்- 100 கிராம்,
    மிளகாய் தூள்- 100 கிராம்,
    குளியல் சோப்பு 25 கிராம் - 1,
    துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணையை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின், ஜூன் 5-ம் தேதி முதல் 2-ம் தவணை கொரோனா நிவாரண நிதியை பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன. வரும் 4-ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், 5-ம் தேதி முதல் நிவாரணப் பொருள்களை பொது மக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தவறாது, அவற்றை பெற்றுக் கொள்ளவும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.