குஜராத், ம.பி.யில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து .


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.


குஜராத் மாநிலம் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து குஜராத் மாநிலக் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் கூறும்போது, ''கரோனா பரவலால் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. எனினும் சூழலைக் கருத்தில் கொண்டு தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் அறிவியல் பிரிவில் படித்துவந்த 1.4 லட்சம் மாணவர்களும் பொதுப் பிரிவில் படித்துவந்த 5.43 லட்சம் மாணவர்களும் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி செய்யப்படுவர்'' என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்திலும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் கூறும்போது, ''பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் உயிர்தான் தற்போது முக்கியமானது. அவர்களின் எதிர்காலம் குறித்துப் பிறகு கவலைப்பட்டுக் கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து சரியான அறிவிப்பை வெளியிடுவர்'' என்று தெரிவித்துள்ளார்