11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழக அரசு


 கொரோனா தொற்றின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு  தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை  நடத்தலாம் எனவும் அதன் மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் வாரத்தில் தொலைத்தொடர்பு முறையில் வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் தொலைத்தொடர்பு முறையிலும் வகுப்புகளை நடத்தலாம். இவ்வாறு  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.