பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா தமிழ  அரசு?


பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது.


எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.


இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது.


ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர்.


இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.


இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது,


"கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கை இப்போது அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.


பெருமனதுடன் முதல்வர் அவர்கள் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதம் சம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும்.

 மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலை கொடுப்பதாக பள்ளிக்கல்விஅமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம்" என்றார்.