பள்ளிகள் திறப்பு எப்போது? ஜூன் 7க்கு பின் அறிவிப்பு!

 
புதிய கல்வி ஆண்டு, இன்று துவங்கும் நிலையில், பள்ளிகளை திறப்பது மற்றும், 'ஆன்லைனில்' பாடங்களை நடத்துவது குறித்து, வரும், 7ம் தேதிக்கு பின் ஆலோசித்து அறிவிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ் 1 வரையிலான மாணவர்களுக்கு, எந்த தேர்வும் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், நேற்றுடன் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்தது. இன்று முதல், புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், ஊரடங்கு இருந்தபோதும், திட்டமிட்டபடி ஜூனில், 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கின.


இந்த ஆண்டில், பள்ளி கல்வி செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பில், புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள், பள்ளி கல்வி துறையின் நடைமுறைகளை தெரிந்து, அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டுள்ளது.எனவே, புதிய கல்வி ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, எந்தவித வழிகாட்டலும் இன்னும் வழங்கப்படவில்லை.

பள்ளி கல்வி வட்டாரம் கூறியதாவது:

புதிய அமைச்சராக மகேஷ் பொறுப்பேற்றுள்ளார். பள்ளி கல்வி முதன்மை செயலராக, காகர்லா உஷா மற்றும் இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்கள், துறையின் இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.புதிய கல்வி ஆண்டில், என்னென்ன பணிகளை வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்; அவற்றில் புதிய அரசின் கொள்கை முடிவுகள் என்னவென்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதன்பின்னரே, பள்ளிகளை திறப்பது மற்றும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது குறித்து, அறிவிப்புகளை வெளியிட முடியும்.தற்போது, முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளி கல்வி இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களின் ஆலோசனையை பெற்று, ஜூன், 7க்கு பின், அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.