வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு !


 வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் அனைவருக்கும், வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ள போதிலும், வாக்குப்பதிவின்போது, வாக்காளர் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்கண்ட ஆவண அடையாள அட்டைகளில், ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். அதன்படி,

ஆதார் அட்டை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை,

புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,

ஓட்டுநர் உரிமம்,

நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு),

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

இந்திய கடவுச்சீட்டு,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,

பாராளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை


ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றறைக் காட்டி வாக்களிக்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 20 ஏ பிரிவின்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள், பூத் முகவர்கள் தங்களின் அலைபேசிகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டு வரக்கூடாது. கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை முடிந்த பின்னரே, வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் ஒரு கரத்துக்கு மட்டும் கையுறை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது