ஆசிரியர் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்க: 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை

 தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை படிப்படியாக பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.இளங்கோவன், மாநிலத் தலைவர் சு. வடிவேல் சுந்தர் ஆகியோர் திருச்சியில் இன்று (பிப். 20) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"தமிழகத்தில் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா, 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை அமல்படுத்தினார். அது முதல் இதுவரையில் நடத்தப்பட்ட 5 தேர்வுகளில் ஏறத்தாழ 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றும் கடந்த 8 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்.

இது தொடர்பாக எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பல முறை நேரில் அளித்து வலியுறுத்தி உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 15 மாவட்டங்களில் 22 இடங்களில் உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், காத்திருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சான்றிதழ் ஒப்படைப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு கடந்த காலங்களில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.

மேலும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் எங்களை மீண்டும் நியமனத் தேர்வு என மற்றொரு தேர்வை எழுதச் சொல்லி வற்புறுத்துவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது.

எனவே, நியமனத் தேர்வை ரத்து செய்து விட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு படிப்படியாக பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வர் அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறோம்".