ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, சென்னை டிபிஐ வளாகம் போராட்டக்களமானது.

 

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, சென்னை டிபிஐ வளாகம் போராட்டக்களமானது. பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள், டிபிஐ வளாகத்தில் 9-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, பகுதிநேர ஆசிரியர்களும் இதே வளாகத்தில் 3-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.


2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் 12 ஆயிரத்து 483 உடற்கல்வி, ஓவியம், தையற்கலை பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரு போராட்டங்களிலும் சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரவு, பகல் பாராமல் வெயில், பனியை பொருப்படுத்தாமல் ஆசிரியர்கள் போராடும் நிலையில், இதுவரை அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தெரிவித்துள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள், ''பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் எங்களுக்கு அரசு தங்களது பணி சேவையை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.