தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஒரு வகுப்பறையில் 10 மாணவர்க்கு மட்டுமே அனுமதி!

 தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் 11ம் வகுப்பிறகு பொதுத்தேர்வு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கொரோனா தொற்று அச்சத்தால் ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்களை மட்டுமே அமர வைக்க (வழக்கமாக 20 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் அமர வைக்கப்படுவர்) முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் கூடுதல் தேர்வு மையங்கள் தேவைப்படும் என்பதால் புதிய மையங்கள் குறித்த பட்டியல் சேகரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.

மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் அவரவர் படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.