வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் சேர்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு. எப்படி சேர்ப்பது!

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம், மாற்றங்கள் செய்யலாம் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கான இணைய முகவரியை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“ஜன.01-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (ஜன.20) வெளியிடப்பட்டுள்ளன.

 2. ஜன.01-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், நவ.16 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த/ இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் நவ.16/2020-ம் தேதியிலிருந்து டிச.15/2020-ம் தேதி வரை பெறப்பட்டன.

 3. மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தக் காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 21,82,120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 5,09,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

 4. பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 3,32,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,09,292 ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,84,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,75,365 ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 5. 2021-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,26,74,446 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

 6. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,48,262; பெண்கள் 3,46,476; மூன்றாம் பாலினத்தவர் 107).

 7. தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,272 ஆவர். (ஆண்கள் 91,936; பெண்கள் 84,281; மூன்றாம் பாலினத்தவர் 55).

 8. வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்களும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2021-ம் காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

 9. இதுவரை, 4,62,597 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

 10. 2021ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 4,80,953; பெண்கள் 4,16,423; மூன்றாம் பாலினத்தவர் 318)

11. வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் தங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.

 12. வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம் :-


 1. வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

 2. இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

 3. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘‘Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

 13. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை "1950" என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் இம்மையங்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042 521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது”. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.