நாளை தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதில்லை.. தமிழக அரசு உத்தரவு

 

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 26 (குடியரசு தினம்), 2. மே 1 (உழைப்பாளர் தினம்), 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்). 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்

மேற்கண்ட் நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த ஊர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைத்து வருகிறது. அதாவது கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்ற முடியும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மே 1ம் தேதி நடைபெற வேண்டிய கூட்டமும், ஆகஸ்ட் 15 நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டமும், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கூட்டமும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் ஜனவரி 26ம் தேதியான நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.