93,935 பேருக்கு வேலை வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்.!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 52,257 கோடி ரூபாய் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாநில அரசின் அமைச்சரவை இன்று (29.01.2021) கூடி 34 முக்கிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையான தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது.  


இன்றைய தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 34  திட்டங்களில்  52,257 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 93,935 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகும். மேற்படி முதலீடுகள் பெரும்பாலும், மின்னணுவியல், மின் வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, சூரிய சக்தி மின்கல உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.  


இன்று அமைச்சரவையால் அனுமதி அளிக்கப்பட்ட சில முக்கிய முதலீடுகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-


1) டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5763 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 18,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைபேசி உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


2) தைவான் நாட்டினைச் சேர்ந்த பெகாட்ரான் கார்ப்பரேஷன் 1100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 14079 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கைபேசிகள் உற்பத்தி திட் திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


3)தைவான் நாட்டினைச் சேர்ந்த Luxshare நிறுவனம், 745 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு வன்பொருள் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், செயல்படாமல் இருந்த மோட்டாரோலா தொழிற்சாலையினை மீண்டும் நிறுவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


4) சன் எடிசன் நிறுவனம், 4629 கோடி ருபாய் முதலீடு மற்றும் 5397 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதிகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


5) Ola Electric நிறுவனம் 2354 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2182 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்றுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


6)ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த Eickhoff Wind Ltd நிறுவனம் 621 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 319 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் சென்னைக்கு அருகில் ஒரு காற்றாலை மின்சக்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் சீனா மற்றும் ஜெர்மனி நாட்டில் இருந்த தனது திட்டங்களை, தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்ய உள்ளது.


7) உலகின் மிகப் பெரிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த BASF நிறுவனம் 345 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 235 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் வாகன உமிழ்வு வினையூக்கிகள் (Automobile Emission Catalysts) உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.  


8) லூகாஸ் TVS நிறுவனம் 2500 கோடி முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


 9) ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த டெய்செல் கார்ப்பரேஷன், இந்தியாவிலேயே முதன் முதலாக காற்றுப்பைகளில் காற்றடைக்கும் கருவி (Air bag inflators) உற்பத்தி திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள One Hub Chennai தொழிற் பூங்காவில் 358 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 180 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில்  நிறுவ திட்டமிட்டுள்ளது.


10) கொரிய நாட்டினைச் சேர்ந்த எல். எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஸ்விட்சுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.

 

11) அமெரிக்க நாட்டினைத் தனது உற்பத்தித் தளமாகக் கொண்ட 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யார் தொழிற் பூங்காவில்  மோட்டார் வாகன பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.

 

12) Data patterns நிறுவனம் 303.52 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 703 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலையின் சென்னை முனையத்தில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது.


ஒவ்வொரு முதலீட்டாளர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு தொகுப்புச் சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  சில முதலீடுகளில், பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க ஏதுவாக, தொகுப்புச் சலுகை இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  இப்போது, அமைச்சரவை ஒப்புதலுடன், சட்டபூர்வமான பிணைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும்.


இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 ,விரைவில் வெளியிடப்பட உள்ளது. அரசு எடுத்து வரும் இத்தகைய சிறப்பான முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகி குறிப்பாக, கொரானா நோய்தொற்று காலத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் சீர் செய்து அதிக அளவில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக வழிவகை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.