வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் நர்சுகளுக்கான 1,500 பணியிடங்களுக்கு கலந்தாய்வு

வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் நர்சுகளுக்கான 1,500 பணியிடங்களுக்கு கலந்தாய்வு சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


 சென்னை அடையாறில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் முன்னிலை வகித்தார். இந்தநிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு கடமைகளை தாண்டிமனிதநேய அடிப்படையில் உதவியதற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைந்துள்ளது. மருத்துவ பணியாளர்களில் பதிவு செய்தவர்களில் சிலர் தடுப்பூசி செலுத்த வருவதில்லை. முன்கள பணியாளர்கள் மற்றும் முதியவர்களும் தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர். எனவே மத்திய அரசு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை பரிசீலனை செய்ய வேண்டும். தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது. சுகாதாரத்துறை அமைச்சர், நான், மூத்த டாக்டர்கள், அரசு மருத்துவமனை ‘டீன்கள்’ என அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளோம். எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், தொற்று எண்ணிக்கை குறைந்ததால் தடுப்பூசி வேண்டாம் என்று நினைப்பது தவறு. நர்சுகளுக்கான 1,500 பணியிடங்கள் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் கலந்தாய்வு செய்யப்படும். அவர்களின் மற்ற கோரிக்கை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்