10,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு. பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாதிரித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது என்று அறிவதற்காக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது பள்ளி வளாகத்தில் உள்ள ஹைடெக் ஆய்வகம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . இதன் அடிப்படையில் ஒவ்வொரு படத்திற்கும் 30 கேள்விகள் வீதம் 120 கேள்விகள் கேட்கப்படவுள்ளது.

மாணவர்கள் கொடுக்கப்பட்ட விடைகளை தேர்ந்தெடுக்கும்படி வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்களை குழுக்களாக பிரித்து ஒரு நாளைக்கு மூன்று குழுக்கள் வீதம் நான்கு நாட்கள் இந்த தேர்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு குழு மாணவர்களும் தேர்வு எழுதியவுடன் மாணவர்கள் பயன்படுத்திய ஆய்வகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு அடுத்த குழு மாணவரை அனுமதிக்க வேண்டும். மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தே தேர்வுக்கு வர வேண்டும்" என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.