10, பிளஸ் 1 பொதுத்தேர்வு விபரம் பள்ளிகள் பதிவு செய்ய உத்தரவு

பிளஸ் 2வை தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான விபரங்களையும் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம்.பாலினம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்று திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி மற்றும் மாணவரின் முகவரி என, 12 வகையான தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த விபரங்களை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண் இணையதளம் வழியே பதிவு செய்து, சரிபார்த்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புக்கு, பிறப்பு சான்றிதழில் உள்ளபடி பெயர் இருக்க வேண்டும். இந்த வகுப்பு மாணவர்களுக்கு, 2021 மார்ச், 1ல் கண்டிப்பாக, 14 வயது பூர்த்தியாக வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின், பிறந்த தேதி மாற்றம் கோரினால், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. மொபைல் போன் எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். அதில் தான், தேர்வு குறித்த விபரங்கள் அனுப்பப்படும். இந்த விபரங்கள் அனைத்தையும் பிப்., 1முதல், 11ம் தேதிக்குள் அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.