TET தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை இழந்தவர்கள் முதல்வரிடம் நேரில் மனு! 

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள் முதல்வர் பழனிசாமி இடம் நேரில் மனு கொடுத்தனர். நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல் இதோ: கடலூர்  மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013ஆம் ஆண்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் அதாவது வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் நேரில் மனு அளித்தனர் .

அந்த மனுவில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் 2009- ன்படி தொடக்கநிலை, நடுநிலை ,வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோரின் தகுதியை நிர்ணயிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை எதிர்த்தது தமிழக அரசு. பின்பு 2011ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஏற்றுக்கொண்டு அதற்கான அரசாணை வெளியிட்டது.

 அதன்படி முதன்முறையாக 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப் பட்டாலும் 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் தேர்வில் 60 மதிப்பெண்களும்  பள்ளி மற்றும் கல்லூரிகளின் மதிப்பெண்களில் 40 சதவீதமாகவும் கணக்கிட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

 மேலும் 2014ல் 5% தளர்வு அளிக்கப்பட்டது.அது 2013 க்கும் பொருந்தும் எனவும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடத்தப்பட்டது. இருப்பினும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களில் தமிழக அரசு கடைப்பிடித்து வந்த வெயிட்டேஜ் முறையில் பல ஆசிரியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து  பணிக்குசெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் 462 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காத நிலையில் தமிழக அரசு 2018ஆம் ஆண்டு அந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்தது. அதற்கு பதிலாக மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற போட்டி தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்று அறிவித்தது .

தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40, எனவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 45 வயது எனவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எனவே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணியை இழந்தவர்கள் மீண்டும் பணி வழங்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.