தமிழர்களுக்கு சாதி வெறியூட்டப் பட்டுள்ளதா? மொழிப் பற்று இல்லையா?..

தமிழர் நாட்டில் எழுகின்றவர்கள் எல்லாம் யார் தலையிலாவது குட்டி விட்டு தன் வீரத்தை காட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் தமிழர் நமக்கு அறிவுரை வழங்கவே பிறந்திருப்பது போலவே பேசுகின்றனர். அதனால் அவர்களும் பிறர் போலவே தமிழ் இனத்தின் தலையிலேயே குட்டுகின்றனர். அதாவது தமிழருக்கு சாதிய உணர்வு ஊட்டப்பட்ட அளவுக்கு மொழி உணர்வு இல்லையென்பதாக தம்பி சீமான் அவர்கள் பேசியதை கேட்ட போது மனம் மிகவும் வருந்தியது. ஒருவர் தன் அரசியல் மேடையை பயன்படுத்தி இப்படியா தமிழினத்தை அவமான படுத்த வேண்டும்?.. தமிழர் என்ன அவ்வளவு கேடுகெட்ட இனமா? நம்மைப் போல சிறந்த இனம் உலகிலேயே இல்லை என்போம்.

அதன் வழியாக சில கேள்விகளை நான் பலருக்கும் முன் வைக்க விரும்புகின்றேன்.

இந்தி மொழித் திணிப்பை எதிர்த்த போரில் இறந்த நடராசன், தளமுத்து, விருகை அரங்கநாதன் கீழப்பழுவூர் ராசேந்திரன் என பலரும் எந்த சாதியை காக்க உயரீந்தவர்கள்.. சொல்ல முடியுமா? தமிழ் மொழிக்காகவே உயிர் வாழ்ந்தது தமிழரினம். உடல் மண்ணிற்கு! உயிர் தமிழருக்கு என முழக்கமிட்டவர்கள் நாமே! தனதாக எல்லாவற்றையும் தனித்தனியாக படைத்தளித்து வைத்தது நம் இனமே. அதனை காக்க முயலாதவர்களே சாக்கடையாக வாரி வீசுகின்றனர்.

இலங்கையில் சிங்களவர்கள் நடத்திய ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்து தன்னை அனலாக்கிக் கொண்ட முத்துக்குமார் என பலரும் எந்த  சாதியை முன்னிலை படுத்தி ஈகம் செய்தார்கள்? தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் கரூர் சிவானந்தம் என பலரும் மதம் சாதி கடந்தல்லோ நம் இனம் காக்கவே உயிரீந்தார்கள்.! அவர்கள் எல்லாம் தமிழர் இனத்தின் அடையாளம் இல்லையா? தமிழர் என்ற உணர்வின் வெளிப்பாடுகள் அல்லவோ!.

மொழிவழி மாநிலம் அமைந்த போது திராவிடர்கள் தமிழரின் நில பகுதிகளை அபகரித்த போது மண் உரிமைக்காக போராடிய பி. எசு. மணி,  மார்சல் நேசமணி, காந்திராமன், பீர்முகம்மது, குஞ்சன்நாடார்.. வடக்கில் மங்கலங்கிழார், சிலம்புச் செல்வர் ம பொ சி, திருவாலங்காடு கோவிந்தசாமி, தணிகைகோ இரசீத் , விநாயகம் என போராடியவர்கள் எல்லாம் எந்த சாதியை காக்க? மதத்தை  காக்க சொல்ல முடியுமா? அப்படி எழுந்து நின்றவர்களை எல்லாம் புதிதாக வந்தவர்கள் அறியாமல் பேசுவது சரியாகப் படவில்ல.

தமிழ்நாட்டிற்கு அவரை போல தலைவர் இல்லையென பேசும் பெருந்தலைவர் காமராசரையே சொந்த மக்களே தோற்கடித்தார்களே அது இந்தி திணிப்பால் வந்த கசப்பு தானே!. அங்கே ஏது சாதிபற்று?

நாம் தமிழர்கள். நாம் எதை பேசினாலும் ஆய்ந்து பேச வேண்டும். நம் இனம் காக்க முனைந்து பேச வேண்டும். நாம் பிறரைப்போல தவறுகளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்பது என் அன்பான வேண்டுகோள்.

நாம் பலரிடமும் பலவும் இழந்து இருக்கிறோம். நாம் இழந்தவற்றை தற்போது வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நம் செழுமைகளை மீண்டும் திறனாய்வு செய்ய வேண்டும். அதனால் இங்கு வந்தவர்களைப் போலவே நாம் நம் கண்களை முடிக்கொண்டு பேசுவதை விட வேண்டும். அதனை கேட்கும் இளையோர்களும் நம் பழமை வரலாறுகளை படித்து அறிந்து எழ வேண்டும். அப்படியொரு உணர்வே தமிழருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இங்கே நடக்கும் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் தமிழ்வழி படிப்பை ஒழித்து விட்டன. அதற்கு நாம் ஆக்கமானவற்றை சிந்திப்போம். தமிழர் என்ற உணர்வோடு தமிழகம்  எழுந்து நிற்க உழைப்போம். தமிழருக்கு சாதி பற்றாவது இருந்திருக்குமே யாரால்.. இங்கே ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் எல்லாம் முதலமைச்சர்களாகவோ.. தலைவர்களாகவோ வந்திருக்கவே முடியாது. அதனைத் தானே அண்டை மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக சேர்த்து கொண்டிருக்கின்றன?!...


பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.