,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எளிய மக்கள் கல்வி பெற வித்திட்டவர் ,சாதி ஒழிப்பு போராளி, சுதந்திர போராட்ட தியாகி....S.S.V.கோவிந்தசாமி செட்டியார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


தருமபுரி மாவட்டம் அரூர் நகரில் 1913ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி பிறந்தவர்தான் இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தியாகி, எஸ். எஸ் .வி. கோவிந்தசாமி செட்டியார் அவர்கள். *இவருடைய வரலாற்று நகர்வுகள் நமக்கு பெரும் வியப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. இதை இளைய தலைமுறைக்கு வழங்குவதை எனது அடிப்படை சமூக கடமையாய் கருதுகிறேன்.


* இந்திய தேசத்தின் மீதும் அதன் விடுதலையின் மீது தீராத காதல் கொண்ட இவர் அண்ணல் காந்தியை நேரடியாக சந்தித்து பேசி 1927ஆம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். *மோதிலால் நேரு அலகாபாத்தில் தங்கியிருந்த காலத்தில் அவரோடு தங்கியிருந்தும், நெருக்கமான நண்பராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் தான், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ,பகத்சிங், சுகதேவ் ,ராஜகுரு, ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர். எனவேதான் அவர் பெற்ற ஐந்து ஆண் குழந்தைகளுக்கும் அவர்களின் பெயரை சூட்டி மகிழ்ந்தார். ஆண் குழந்தைகள் 5 பேருக்கு சுகதேவ், ராஜகுரு , பகத்சிங் , சுபாஷ், காந்தி, எனவும், மற்ற ஐந்து பெண் குழந்தைகளுக்கும் இந்திரா காந்தி, கஸ்தூரிபாய், விஜயலட்சுமி பண்டிட், ஜான்சிராணி .மீராபாய் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்,


*பல்வேறுபட்ட சுதந்திர போராட்ட களத்தில் இவர் ஈடுபட்டு "வந்தே மாதரம் என்கிற முழக்கத்தை தொடர்ந்து முழங்கியவர். அந்த குற்றத்திற்காகவே இவரை பிரிட்டிஷ் அரசின் காவல்துறை, கை ,கால், பல், என அனைத்தையும் உடைத்து சிறையில் அடைத்தார்கள். இவருடைய போராட்டங்கள் அண்ணல் காந்தியோடு சத்தியாகிரக போராட்டம் ,கோலார் போராட்டம் ,திருவாங்கூர், போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்தார். அப்போதுதான் 5 ஆண்டு சிறை தண்டனை பிரிட்டிஷ் அரசால் கொடுக்கப்பட்டு திருவாங்கூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து வேலூர் சிறை, அலிகார் சிறை ,என பல சிறைகளில் பல மாதங்கள் தேச விடுதலைக்காக சிறை தண்டனை அனுபவித்தவர். எனவேதான் கர்மவீரர் காமராசர் ,கக்கன், தமிழகத்தின் அன்றைய ஆளுநர், என பல தலைவர்கள் அன்றைக்கே அவருடைய இல்லத்திற்கு வருகை புரிந்திருக்கிறார். அதை கடந்து அவரை தருமபுரி மாவட்டம் அரூர் மக்கள் போற்றி புகழ வேண்டும் என சொல்வதற்கு மிக முக்கியமாக காரணம்,


அரூரில் வாழ்கிற ஏழை எளிய மக்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக 1944 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை கொடையாக தந்த வள்ளல் இவர்.இன்றைக்கு இயங்கி வருகிற, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, BRC மையம், RDO அலுவலகம் என அதற்கான நிலம் முழுவதும் வழங்கிய பெருமை இவரையே சாரும். அந்த நிலத்தின் இன்றைக்கு மதிப்பு பல கோடியை தாண்டும் என்பது உண்மை. அதைப்போலவே அரூர் நகரத்திற்கு மின்சார வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து ,அன்றைக்கு முதல்வராக இருந்த காமராஜரிடம் நெருக்கமாக இருந்த காரணத்தினால், அவரிடம் பேசி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு பணம் தேவை என்கிற சூழ்நிலையில் ,தனது மனைவியின் தாலிக்கொடி 10 சவரன் நகையை விற்று ,அரூர் நகரத்திற்கு மின்சார வசதியை ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும் .


*அவரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் போற்ற வேண்டிய ஒரு செய்தி நீண்ட நெடிய காலமாக அரூர் நகருக்கு அருகாமையிலுள்ள தீர்த்தமலை கோவிலில் தலித் மக்கள் உள்ளே சென்று வழிபட காலம்காலமாய் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் ,அதைக் கண்டு வெகுண்டெழுந்து அதற்கு எதிரான போராட்டத்தை அறிவித்து, தலித் இளைஞர்கள் 10 பேரின் கையை பிடித்து துணிச்சலோடு ,ஆலய நுழைவு போராட்டத்தை அன்றைக்கே நடத்திய பெருமை இவருக்கு உண்டு.


* மேலும் நாட்டு மக்கள் குடிப்பழக்கத்தால் சீரழிவதை அன்றைக்கே கண்டித்து ,தர்மபுரி மாவட்டம் முழுக்க தனி ஒருவராய் தேசியக் கொடியை சுமந்தவாறு கிராமம் ,கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை தீவிரப்படுத்த தலைவர்களில் இவரே மிக முக்கியமானவர் ஆவார். வெள்ளையர்களுக்கு எதிராய் " ரயில் மறியல் போராட்டத்தில் ( மொரப்பூர்) ஈடுபட்டு 1944 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் சிறை படுத்தப்பட்டு கடுமையாக தடி அடிக்கு ஆட்பட்டவர். *இப்படி எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்தால் , இந்தியத் தலைவர்களாலும், தமிழக தலைவர்களாலும் போற்றப்பட்ட மனிதராகவும்,  காந்தி நேரு ,இந்திரா காந்தி, காமராசர்,ராஜாஜி, போன்ற தலைவரிடம் நெருக்கமான உரியவராக இருந்திருக்கிறார். எனவேதான் அவருடைய மகன் திருமணத்திற்கு அன்றைய தமிழக ஆளுநர் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து உள்ளார். இந்த நிகழ்வு தற்போது உள்ள தாஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது.


* இவரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தற்போது உள்ள முத்து தியேட்டரில் அன்றைய ( ராம் தியேட்டர்) வளாகத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக காமராசரால் அனுப்பி வைக்கப்பட்டு ,கக்கன் அவர்கள் கலந்துகொண்டு இவர் இந்தியாவின் மிகப்பெரிய தலைவர் என்றும், விடுதலைப் போராட்ட தியாகி என்பதை நாட்டு  மக்களுக்கு எடுத்துச் சொன்ன நிகழ்வாய் அது அமைந்துள்ளது. *எனவேதான் இவரின் தொடர் போராட்டங்களையும், அர்ப்பணிப்பையும், போற்றுகிற வகையில் இந்திய அரசு " பொற் தாமரை பட்டய விருதையும், அஞ்சலக முத்திரையும், இந்திய அரசின் சார்பாய் வெளியீட்டு இவரை பெருமைப்படுத்தியது. *இன்றைக்கும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவு இல்லத்தில் இருக்கக்கூடிய அரிய புகைப்படங்கள் நேருவுடன் நெருக்கமாய் இருக்கிற இவருடைய புகைப்படம் மாட்டப்பட்டு உள்ளது. அங்கேசுற்றுலா சென்று பார்க்கிற தருமபுரி மக்கள் வியப்போடு பார்த்து நினைவு கூறுகிற வகையில் இன்றும் சாட்சயமாக உள்ளது.


*எனவே இப்படி ஏழை எளிய மக்களின் கல்விக்கு வித்திட்டவராகவும், சாதி ஒழிப்பு போராளியாகவும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பற்ற மனிதராக உள்ள இவரை பற்றிய எந்த அடையாளமும் , அரூர் நகரில் இல்லாமல் இருப்பதும், அரூர் மக்களின் மனதில் இல்லாமலிருப்பதும் வேதனையிலும் வேதனையாக உள்ளது. எனவே இந்த பதிவின் மூலம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிற கல்லூரிகள், பள்ளிகளில், நடைபெறுகிற சுதந்திர தின விழா ,குடியரசு தின விழாக்களில் தந்தையோடு கைகோர்த்து போராட்ட களத்தில் இருந்த அவருடைய மகன் தற்போது வாழ்ந்து கொண்டுள்ள தியாகி திரு. சுபாஷ் அவர்களை அழைத்து பெருமைப்படுத்தினால், இளைய தலைமுறைக்கு அவருடைய வரலாற்றை சொல்வதோடு மட்டுமல்லாமல் ,அந்த மகத்தான மனிதரின் அர்பணிப்புக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,