*இவ்விரண்டு*

இவ்விரண்டு - இச்சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு.

(1) இவ்விரண்டு - இந்த இரண்டு

இ ->இவ் - சுட்டுப் பெயர்

(2) இவ்விரண்டு - தனித் தனி இரண்டு ( ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தனுப்பு.)

*இவ்விரண்டின் புணர்ச்சி விதி*

*விடை: ஒன்று*

இவ்விரண்டு என்பதன் பொருள் இந்த இரண்டு என்று கொள்வோமெனில்....

எகர வினாமுச் சுட்டின் முன்னர்

உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்

பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு

நீளின்  யகரமும் தோன்றுதல் நெறியே
(நன்னூல்  - 163)

உயிர் முன் உயிர் வரின் உடம்படுமெய் தோன்றும் என்பது பொதுவிதி.

அவ்வுயிர் வினாவாகவோ சுட்டாகவோ இருப்பின் வகரமெய் பெற்றுப் புணரும் என்பது சிறப்பு விதி.

அதாவது இங்கு வரும் வகரமெய்யை உடம்படுமெய்யாகக் கொள்ளுதல் வேண்டா.

எ + அணி = எவ்வணி
இ + யானை = இவ்யானை

இ + இரண்டு = இவ்விரண்டு

*விடை - இரண்டு*

இவ்விரண்டு என்பதன் பொருள்,
இரண்டு + இரண்டு என்று கொண்டால்....

ஒன்ப தொழித்தஎண் ஒன்பதும் இரட்டின்

முன்னதின் முன்அல ஓட உயிர்வரின்

வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல்நெறி.
(நன்னூல் 199)

ஒன்று முதல் பத்துவரையுள்ள எண்களுள், ஒன்பது என்ற எண்ணுப் பெயரைத் தவிர மீதியுள்ளவை, தம் முன் தாம் வந்து புணர்கையில், நிலைமொழியின் முதல் எழுத்தைத் தவிர மற்றவை கெடும். வருமொழி முதல் எழுத்து உயிரானால் வகரமெய் தோன்றும். வருமொழி முதல் எழுத்து மெய்யானால் அதே மெய்யெழுத்து மிகுந்து புணரும்.

ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று

இவ்விரண்டு

மும்மூன்று
நந்நான்கு
ஐவைந்து
அவ்வாறு
எவ்வேழு
எவ்வெட்டு
பப்பத்து

*ஹரிகுமார்*