*🔵🔴சந்திரியான் -2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு  வருகிறது - பள்ளி மாணவிக்கு இஸ்ரோ தலைவர் கடிதம்*
           தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி நதியாவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி உள்ளார்.இஸ்ரோ தலைவர்  சிவன் கிராமப்புற பள்ளி மாணவி நதியாவுக்கு  பாராட்டு தெரிவித்து எழுதி உள்ள கடிதம் ட்விட்டரில் வைராகி உள்ளது குறிப்படத்தக்கது.

                                                   இஸ்ரோ சிவன் அவர்களிடமிருந்து தபாலில் வந்த கடிதம் குறித்து மாணவி நதியா தெரிவித்ததாவது :

                                                                   எங்கள் பள்ளியில் இருந்து இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு  சந்திரியான் - 2 குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும்  வகையில் எனது உணர்வுகளை கடிதமாக எழுதி இருந்தேன். போர்காலம் போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் எனது கடிதத்தை படித்தும்,எங்கள் பள்ளியின் நிகழ்வுகளை பாராட்டியும் சிவன் அய்யா எங்கள் பள்ளிக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தார்.எங்களுக்கு அதுவே மிக பெரிய ஆச்சரியமாகவும் , பெரும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.

                                                             இன்று காலை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் தபாலில் வந்த கடிதத்தை கொடுத்து மாணவர்கள் முன்பு வாசித்து காண்பித்தபோது, இது கனவா இல்லை நினைவா என்று என்னை நானே கிள்ளி பார்த்து கொண்டேன்.சிவன் அய்யா எனக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில்,

                                                                               " அன்பார்ந்த மாணவி நதியா,

                                              உன் அன்புக்கு கடிதத்திற்கு மிக்க நன்றி.சந்திரயான் -2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி நன்றாக எழுதி இருக்கிறாய்.

                                                 சந்திரயான் -2 லேண்டர் வெற்றிகரமாக தரையில் இறங்காமல் இருந்தாலும், சந்திரியான் -2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு  வருகிறது.சந்திரயான் - 2 ஆர்பிட்டர் அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை , ஒரு வருட திட்ட ஆயுட்காலத்தை தாண்டி ஏழு வருட காலத்திற்கு அனுப்பும்.

                                              உன் பள்ளி இஸ்ரோவின் ஒவ்வொரு முயற்சிக்கும் பிரார்த்தனை செய்வதை, தலைமை ஆசிரியர் மூலம் தெரிந்து கொள்கிறேன்.நீயும் மற்றும் உன் பள்ளி மாணவ செல்வங்களும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன்".உங்கள் அன்புடன் கை .சிவன் என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

                                                                       இந்த கடிதம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது. மிக பெரிய அறிவியல் துறையில், உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ள   விஞ்ஞானி என்னை போன்று கிராம புறத்தில் உள்ள அரசு பள்ளி மாணவி எழுதிய கடிதத்தை பார்த்து அன்புடன் கடிதம் எழுதி உள்ளது பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மகிழ்வுடன் கூறினார்.                       இந்த கடிதம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் எங்கள் பள்ளியின் முந்தைய கடிதத்துக்கு , ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், போர்காலம் போன்ற நேரத்தில் பல்வேறு வேலைகளுக்கு இடையில் எங்கள் பள்ளிக்கு கடிதம் அனுப்பி இருந்தது எங்களுக்கு பெரிய விஷயமாக இருந்தது.தற்போது மாணவி நதியாவின் கடிதத்துக்கு இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் பதில் கடிதம் அனுப்பி உள்ளது எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று  தெரிவித்தார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி நதியாவுக்கு தபால் மூலம் இஸ்ரோ தலைவர் சிவன் எழுதி உள்ள   பாராட்டு கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவியிடம் வழங்கினார்.