TRB -  முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???


தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரியர் மற் றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - | பணியிடங்கள் மற்றும் 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 பணியிடங்களை நிரப்புவதாக கடந்த பிப்.11 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 25 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் , எழுத்துத் தேர்வு ஜூன் 26 , 27 ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.


 இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த பிப் . 26 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக முதுநிலை ஆசிரியர் தேர்வு தேதி வெளியிடப்பட்டதால் , தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என முதுநிலை பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். இதற்காக மார்ச் 1 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முதுநிலை பட்டதாரிகள் தயாராகினர். ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி ஒத்தி வைக்கப்படுவதாகவும் , ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி எப்போது கிடைக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென அறிவித்தது.


இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ம் தேதியே முடிந்துவிட்டது. மே 2 ம் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது என்ற போதிலும் , வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனை போன்றவை முடிவுக்கு வந்துள்ளன.ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன. 9 , 10 , பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகள் மட்டுமே சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் , கொரோனா 2 வது அலை அதிகரித்து வருவதால் பிளஸ் 2 வகுப்புகள் மட் டுமே பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் கொரோனாவில் கழிந்துள்ளது.


இந்த காலத்தில் எந்த ஆசிரியர் பணிக்கும் தேர்வு நடத்தாத நிலையில் , முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பை வெளியிட்ட போதிலும் , விண்ணப்பம் பெறுவதை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. எனவே முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட்டு தேர்வும் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.