அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு: விவரங்களை பேனர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள் 


ஊத்தங்கரை அருகே உள்ள கிராமங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை ஆசிரியர்கள் வைத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி, நாடார் தெரு, புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், கடந்த 1962-ம் ஆண்டு கெரிகேப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 105 மாணவ, மாணவிகளும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 30 மாணவ, மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டிற்கு மேலாக விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கல்வி தொலைக்காட்சிகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கெரிகேப்பள்ளி ஆசிரியர்கள் பிளக்ஸ் பேனர்கள் அச்சிட்டு கிராமங்களில் ஒட்டியுள்ளனர்.


ஆசிரியர் வீரமணி கூறும்போது, கரோனா ஊரடங்கால் கல்வி தொலைக்காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர் களும் இதனை அறியும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் தகவல்களுடன் கூடிய விழிப்புணர்வு பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் பாடங்கள் நேரம், ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.


மாணவர்கள் தொலைக் காட்சியில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தவறாமல் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.