தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு. 


தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 5 முனை போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக களப்பணியாற்றியது. அதுபோல் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும் போராடியது. எனினும் மக்கள் என்ன தீர்ப்பளித்துள்ளார்கள் என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும்.


விமர்சகர்

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் அரசியல் விமர்சகர்களின் பார்வையிலும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்றைய தினம் ஏபிபி சி வோட்டர், ரிபப்ளிக், தந்தி டிவி, இந்தியா டுடே, சாணக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தின.


திமுக கூட்டணி

அதில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 133 இடங்கலிலும் அதிமுக 68 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது போல் 33 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியிடையே போட்டி நிலவும்.


அதிமுக கூட்டணி

இந்த 33 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றாலும் 68+33= 101 தொகுதிகளே வருகிறது. எனவே அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அதிமுக மட்டும் 63 இடங்களில் வெல்லும். 22 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும்.