புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நமது தமிழ் செய்திவளை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் இதோ,

 புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. இதனால், அங்கே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்திருந்தார்.

புதுச்சேரியில், நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் என 6 பேர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதுடன், பெரும்பான்மையை இழந்தது. முதலமைச்சர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரியில் அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாயின.அதன்படி, இன்று இரவு புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.

புதுச்சேரிக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.