தமிழகத்தில் நாளை முதல் பஸ் ஸ்டிரைக்: 90% பேருந்துகள் இயங்காது.

 ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை (25ம் தேதி) முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர். இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி வருகின்றனர். சென்னை, குரோம்பேட்டையில் கடந்த 18ம் தேதி நடந்த, 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் (22ம் தேதி) நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிடபிள்யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நாளை முதல் (25ம் ேததி) காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.


இந்த போராட்டத்தினால் 90 சதவீதம் பேருந்துகள் இயங்காது என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் 22ம் தேதி நடைபெற்றது. அரசு போக்குவரத்துக்கழகங்கள் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு பிரிவினர்களுக்கு இலவச பயணச்சேவை, கிராமங்களுக்கும் பேருந்து போக்குவரத்து, கொரோனா கால பஸ் இயக்கம் என லாப நோக்கம் இல்லாமல் சேவையின் அடிப்படையிலேயே போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து கழகம் இழப்புகளை சந்தித்து வருகிறது. இதை அரசு ஈடுகட்ட தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்குவதில்லை, தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தை வைத்து போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 8,000 கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளின்றே வழங்கப்படுவதில்லை.


தேர்தல் அறிவிப்பற்கு முன் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி கடந்த டிசம்பர் 3ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது.  அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தர வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேப்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25.2.2021 (நாளை) முதல் வேலைநிறுத்தம் செய்வது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். எனவே தொழிலாளர்களின் நியாயங்களை உணர்ந்து எங்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள், பயணிகள் ஆதரவு தர வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மாநிலம் முழுவதும் பஸ்கள் ஓடாது;

சிஐடியு ெபாதுச்செயலாளர் ஆறுமுக நயனார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (நாளை) முதல் போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் 90% பஸ்கள் இயங்காது என எதிர்பார்க்கிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


அமைச்சர் முடிவு அறிவிப்பார்;

இதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீரென வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் முடிவு செய்து அறிவிப்பார்’ என்றார்.