போதிய கால அவகாசமின்றி நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை

 போதிய அவகாசம் வழங்காமல் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, தேர்வை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மே 3-ல் தொடங்கி 21-ம்தேதி வரை நடத்தப்பட உள்ளது. குறைந்த அவகாசமே இருப்பதால், தேர்வை 2 வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள்  வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:


மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இந்திரன், வெங்கடேஷ்: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், மாணவர்கள் இன்னும் முழுமையான கற்றல் மனநிலைக்கு வரவில்லை. தொடக்க கற்றல் நிலைமதிப்பீட்டு தேர்வில் பெரும்பாலான மாணவர்கள்  10-க்கு குறைவாகவே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பாடத் திட்ட குறைப்பை பொறுத்தவரை ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே 40 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கணிதம், வணிகவியல் உட்பட முக்கிய பாடங்களில் 20 சதவீதம் வரையே பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே அவகாசம் உள்ளது. அதில், சட்டப்பேரவை தேர்தல் மற்றும் செய்முறைத் தேர்வு காரணமாக 10 முதல் 15 நாட்கள் கல்விப் பணி தடைபடும். எஞ்சிய நாட்களில் பாடங்களை நடத்தி முடிப்பது சிரமம். பாடங்களை விரைவாக நடத்தும்போது மாணவர்களுக்கு முழுமையான புரிதல் கிடைக்காது.

இதுதவிர, மாதிரி வினாத்தாள், வினாவங்கி குறித்த எந்த தகவலும் வழங்கப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் நடத்தாமல் நேரடியாக பொதுத் தேர்வை நடத்துவதும் உளவியல்ரீதியாக மாணவர்களை பாதிக்கும். சுமார் 50 ஆயிரம் பேர் எழுதக்கூடிய ஜேஇஇ தேர்வுக்காக 8.19 லட்சம் மாணவர்களின் வாழ்வை பணயம் வைக்கக் கூடாது. சிபிஎஸ்இ வாரியம்கூட ஜூன் வரை பொதுத் தேர்வை நடத்த உள்ளது. எனவே, பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு: கடந்த ஜனவரி 19-ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதமே பொதுத் தேர்வை நடத்துவது ஆசிரியர்கள், மாணவர்களிடம் மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள்  பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக குறைந்தபட்சம் 5 மாதமாவது அவகாசம் வழங்க வேண்டும். எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வை ஜூன் மாதம் நடத்துவது உகந்ததாக இருக்கும்.

தேர்வுத் துறை முன்னாள் இயக்குநர் தேவராஜ்: பொதுத் தேர்வை இவ்வளவு விரைவாக நடத்தி முடிக்க அவசியம் இல்லை. கோடை வெப்பம் உச்சமாக இருக்கும் மே மாதத்தில் பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். போதிய அவகாசம் வழங்கி, மாற்று முறையில் தேர்வுநடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.