2020-இல் கூடுதல் வருவாயைப் பெற்ற யூடியூப் செயலி

புதிய ஆய்வு தரவுகளின்படி அதிக வருவாயைப் பெறும் முதல் 100 பயனர் செயலிகள் கடந்த 2019 ஆண்டைக் காட்டிலும் 2020ஆம் ஆண்டு கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளன.

நாளுக்கு நாள் தொழில்நுட்ப உலகம் மாற்றம் கண்டு வருகிறது. தினந்தோறும் புத்தம்புதிய செயலிகள் உருவாகியும், பழைய செயலிகள் புதிய பயனர்களைப் பெற்றும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் பயன்பாட்டு செயலிகள் மீதான சமீபத்திய ஆய்வில் 2020ஆம் ஆண்டில், பயனர் செயலிகளின் வருவாய் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு விளையாட்டு அல்லாத, அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 செயலிகளின் வருவாய் 103 கோடி டாலரை எட்டியுள்ளது. இது 2019ஆம் ஆண்டில் 78 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கூட்டுறவு வகையிலான அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 செயலிகளின் வருவாய் 27 கோடி டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளன. இவை கடந்த 2019ஆம் ஆண்டு 19 கோடி டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் செயலியானது அதிக வருவாயைப் பெறும் செயலிகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் மட்டும் உலக அளவில் 44.5 கோடி டாலர்கள் வருவாயை பெற்றுள்ளது.