Plus Two student sitting in the Prime Minister Modi lounge குடியரசு தின விழா.. மோடி அமரும் மாடத்தில் உட்காரப்போகும் பிளஸ் டூ மாணவி.. ஏன் தெரியுமா?

 
கோரக்பூர்:

 உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த திவ்யாங்கி திரிபாதி இப்போது சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறார். இருக்காதா பின்னே.. பிரதமர் அமர்ந்து பார்க்கும் மாடத்தில் அமர்ந்து கொண்டல்லவா அவர், குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்கப்போகிறார்.


யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்களே. அது திவ்யாங்கி, விஷயத்தில் சரியாக பொருந்திப் போகிறது.


கடந்த ஆண்டு 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 99.6% மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பிடித்தவர் இவர். மற்றும் உயிரியல் குரூப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தவராகும்.


திவ்யாங்கியின் தந்தை உமேஷ் நாத் திரிபாதி, கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். "இது எங்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்கிறார் அவர்.


பிரதமர் அமரும் மாடத்திலிருந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்க்க கடந்த 13ம் தேதி மத்திய அரசிடமிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது என்று கூறுகிறார், தாயார் உஷா திரிபாதி.


மாணவி திவ்யாங்கி கூறுவதை பாருங்கள்.. பிரதமர் மோடியுடன் அமர்ந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பது ஒரு கனவு. அது நனவானதை நினைத்தால் மகிழ்ச்சி. மோடி எனக்கு பிடித்த தலைவர். இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் டாக்டராக, நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறேன். டாக்டராகி நாட்டுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். இவ்வாறு திவ்யாங்கி தெரிவித்தார்.


திவ்யாங்கிக்கு இந்த கவுரவம் கிடைக்க கல்விதான் காரணம். அவரது கல்வித் திறமையை மெச்சி உலகமே உற்றுப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் பிரதமருக்கு பக்கத்தில் அமர வாய்ப்பு கிடைத்துள்ளது.