உலக அரங்கில் இந்தியா

இந்தியாவின் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் கல்வி வளர்ச்சி:

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் கல்வி மேம்பாடு அடிப்படையில் அமைந்துள்ளது. இந்திய கல்வி ஆங்கிலேய காலனி ஆட்சியில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். ஆங்கிலேயர் ஆட்சியை விரிவுபடுத்திய கால கட்டத்தில் கல்வி என்பது மொழியைப் பயில்வதாகவே இருந்தது. இக்கல்வி முறையைச் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்ய வேண்டியதாயிற்து. கல்வி என்பது தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தும் கருவி எனக் கருதப்பட்டது. தேச ஒருமைப்பாட்டு, சமூக நீதி, சமய சார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், மனித வளங்களைப் பயன்படுத்துதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, தொழில் மயமாக்கல், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயர்ந்த குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டன. எனவே கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன.இதன்படி 1948 ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1952-ல் A. லெட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1964-ல் C.S. கோத்தாரி என்பவர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 1968-ல் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது.

அனைவருக்கும் ஆரம்பக்கல்வி:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 1950 முதல் 1985 வரை ஏராளமாகப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு இடைநிறுத்தம் இன்றி கல்வியைத் தொடர தரமான கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது.

கரும்பலகைத் திட்டம்:

தொடக்கப்பள்ளியின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு பெரிய வகுப்புகள், கரும்பலகைகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், தேசப்படங்கள், விலங்கியல் படங்கள் மற்றும் பிற கற்பித்தல் பொருட்கள் கொடுக்கப்பட்டன. இவற்றோடு முறைசாரக் கல்விக்கான புதிய திட்டமும், அதை முன் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதலும் மதிப்பீட்டு முறையும் அறிவிக்கப்பட்டன.

இடைநிலைக் கல்வி:

1983 ல் உயர்நிலை, இடைநிலை, துவக்கப்பள்ளி 12:5 என்ற விகிதத்தில் இருந்தது. எனவே தேவையான இடங்களில் துவக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. நவோதயாப் பள்ளிகள் நாடெங்கும் எல்லா மாவட்டத்திலும் நிறுவப்பட வேண்டுமென நோக்கம் உருவானது. தற்போது தமிழ்நாடு தவிர 28 மாநிலங்களில் 446 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கிராமப்புற குழந்தைகள் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் இவை. இங்கு இரு பாலரும் பயில்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமபுர, திறன் மிகு மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உயர்ந்த கல்வி வழங்குவது இதன் நோக்கமாகும்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT):

1961-செப்டம்பர் 1-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் கல்வி அமைச்சகத்துக்கு உதவவும், பரிந்துரை செய்யவும் ஏற்படுத்தப்பட்டது. பள்ளி - பாடத்திட்டங்கள், ஆசிரியரின் பயிற்சி இவற்றை ஆராய்ந்து தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து மேம்பாட்டுக்கு வழி வகுப்பதே இதன் இலட்சியம். மண்டலக் கல்விக் கல்லூரிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையம், காஷ்மீர், புவனேஸ்வர், போபால் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இக்கல்லூரிகளை நிறுவியுள்ளது. ஆசிரியர் சேவைக்கு முன் பயிற்சி மற்றும் பின் பயிற்சிகளை இவை நடத்துகின்றன. கோடைகால பயிற்சி, மற்றும் அஞ்சல் வழி மூலம், பயிற்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியருக்குப் பயிற்சி அளிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 1952-ல் இந்திய அரசின் கல்வித் தீர்மானம் உருவானது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளன. இதில் ஹிந்தி போதனையும், ஹிந்தி கற்கவும் வசதி உள்ளது. கேந்திரிய வித்யாலயா அல்லது மத்திய பள்ளிகள் பாதுகாப்புத்துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் நாடெங்கும் எந்த இடத்திற்கும் பணிமாற்றம் செய்யப்படும் நிலை உள்ளதால் அவர்களுடைய குழந்தைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இடைநிலைக் கல்வியைத் தொடர இப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இன்று நமது நாட்டில் 874 கேந்திரிய வித்யாலங்கள் உள்ளன.

திறந்த வெளிப் பள்ளி (Open School):

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) 1979-ல் நாட்டின் தொலைவிடங்களில் உள்ளோர் நலனுக்காக இது தொடங்கப்பட்டது. இது தொலை தூரக்கல்வி முறையைப் பின்பற்றி இடைநிலைக் கல்வி அளிக்கிறது. இங்கு பாடங்களைத் தபால் மூலம் அனுப்புதல், நேரடி வகுப்புகள். தொலைக்காட்சி வகுப்புகள் மூலம் பயிற்சி (B) C BSE பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகங்கள் (Universities):

நிகர் நிலைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் உட்பட 259 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை தவிர நிகர் நிலைப்பல்கலைக்கழகத் தகுதியுடன் 49 நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 11089 கல்லூரிகளும், 74.18 லட்சம் மாணவர்களும், 3.42 லட்சம் பல்கலைக் கழக ஆசிரியர்களும் உள்ளனர். 1953 ல் நாடாளுமன்றச் சட்டத்தால் பல்கலைக்கழக மானியக்குழு நிறுவப்பட்டது. பல தன்னாட்சிக் கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் வழிக் கல்வி பல பல்கலைக்கழகங்கள் 1962-ஆம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக்கல்வியை நடத்தி வருகின்றன. இன்று 60-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களால் இவைநடத்தப்படுகின்றன. இவை திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களாகச் செயல்படுகின்றன.

இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (IT):

பொறியியல் மற்றும் பண்பாட்டு விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் I.I.T. எனப்படும் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகும். இவை கோரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், பெங்களூர் மற்றும் டில்லியில் அமைந்துள்ளது.

கல்விச் சலுகைகள்:

எல்லா மாநிலங்களிலும் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகின்றது. மேல்நிலைக்கல்வி வரை பேருந்து மற்றும் புகை வண்டியில் பள்ளிக்கு இலவசமாக சென்று வர அனுமதி வழங்குகிறது. மேல்நிலைக்கல்வி வரை பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம், கல்வி இலவசமாக வழங்குகிறது. அத்துடன் அரசு மானியமும் வழங்குகிறது. இதைத் தவிர தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைக் கல்வி வரை தகுதி உள்ளவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கல்வித் துறையில் இந்தியா விரைந்து முன்னேறும் நாடாக உள்ளது.