indian-econ

உலக அரங்கில் இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை :2020

                     பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி-யின் இந்தியாவிற்கான பொருளாதார ஆய்வறிக்கை புது தில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி, உறுதியான நீடித்த முன்னேற்றப் பாதையில் தொடரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பின்தங்கிய நிலையில் உள்ள தனியார் பெருநிறுவன முதலீடு மற்றும் தொழில்துறை உற்பத்தி ஆகியவை குறித்த கேள்விக் குறியையும் இது எழுப்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப்பாதையின் முக்கிய அம்சமாக நுகர்வுத் திறன் அமைந்து  உள்ளது. வரிவகைகளில் எளிமை, வணிகம் செய்ய ஏதுவான செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு அதிகரிப்பு ஆகியவை தொடர்பான சீர்திருத்தங்களால் வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருக்கும் என்று இந்த அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், அதிகத் திறன் கொண்ட பணிகளின் உருவாக்கம் மற்றும் மந்த நிலையில் இருக்கும் கிராமப்புற வருமானம் ஆகியவை முக்கிய சவால்களாக இருந்து வருகின்றன.

                 இந்திய மாநிலங்ககளுக்கு இடையில் ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சி இல்லை. அதாவது, ஏழை எளிய  மாநிலங்களால் பணக்கார மாநிலங்களுக்கு ஈடுகட்டும் வகையில் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்குள்ளேயே அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தப் பொருளாதார வேற்றுமை விரைவாகக் களையப்பட வேண்டும். இந்த அறிக்கையை வெளியிடும்போது, ஓ.இ.சி.டி-யின் தலைமைப் பொருளாதார வல்லுனர் லாரன்ஸ் பூன் அவர்கள், உலகப் பொருளாதாரத்தில், ஒரு வளர்ச்சி நாயகனாக இந்தியா தற்போது தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது எனக் கூறினார்

              உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக கட்டமைப்பிற்கான நிதி வசதிகளை உருவாக்கிக் கொடுத்தல், தொழிலாளர் சட்டங்களை நவீனமயமாக்குதல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், நிதித்துறையை மேம்படுத்துதல், வணிகக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல்,  வாடகை விதிமுறைகள் மற்றும் சொத்துரிமை குறித்த விஷயங்களை வலுப்படுத்தி அனைவருக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்கும் என, ஓ.இ.சி.டி-யின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

             மக்களின் வருமானங்களில் நிலவும் வேறுபாடுகள், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் அகியவற்றில் உள்ள சமூக சவால்களைப் பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறந்தவெளிக் கழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டப் பணிகளை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியது. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் முதல், இதுவரை சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் சுகாதார விளைவுகள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு சாட்சியளிக்கின்றன. பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும் பெண் குழந்தைகளின் கல்வியில் உதவவும் பெண்கள் நலத் திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. எனினும், பொருளாதார வளர்ச்சியுடன் சமநிலையை மேம்படுத்துவதில் சவால்களும் அதிகமாக உள்ளன.

            பசுமையான வழிமுறைகளில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அதே சமயம், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என ஓ.இ.சி.டி அறிக்கை கூறியுள்ளது. காற்று மாசுபாடு அதிகமாக உள்ளதாகவும், துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இது இன்னும் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்புறக் காற்று மாசுபாடும், இந்தியாவில் ஏற்படும் அகால மரணங்களுக்கு பெரிய காரணமாக உள்ளது. ஏழைகளுக்காக, தூய சமையல் எரிவாயுவை மலிவு விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், செயலாக்க ரீதியாக இன்னும் பல பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளன. உலகளவில், காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து நகரங்களில் ஒன்பது நகரங்கள் இந்திய நகரங்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது.

               இந்தியாவிற்கான ஓ.இ.சி.டி பொருளாதார ஆய்வறிக்கை  இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன் மற்றும் நிதி அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் முன்பு வழங்கப்பட்டது. பணவீக்கத்தை இந்தியா திறமையுடன் கட்டுப்படுத்தியதை ஓ.இ.சி.டி அறிக்கை பாராட்டியுள்ளது. புதிய பணவியல் கொள்கை கட்டமைப்பின் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று ஓ.இ.சி.டி அறிக்கை  தெரிவித்துள்ளது. மேக்ரோ-பொருளாதார கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறைகளை மேம்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், சமூக வேற்றுமைகளைக் களைதல், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரித்தல், சொத்துரிமை மற்றும் மலிவு விலை வீட்டு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பசுமை வளர்ச்சிக்கு உந்துதல் அளித்தல் ஆகியவை ஓ.இ.சி.டி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பரிந்துரைகளாகக் கருதப்படுகிறது.                                                                                                                 
                       ஓ.இ.சி.டி பொருளாதார ஆய்வு, இந்தியாவின் வளர்ச்சி  2020  - ஆம் ஆண்டில் 6.2 சதவிகிதமாகவும் 2021 ஆம் ஆண்டில் 6.4 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளது. நடப்பாண்டில் இருக்கும் 5.8 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து வளர்ச்சியை மீட்டெடுக்க, ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது. கூட்டாட்சி முறைக்கான புதிய அணுகுமுறை, நிதி சேர்க்கைக்கான முன்முயற்சிகள், வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனைகளை சரி செய்து நிதித் துறையை மேம்படுத்துவது, குடிமக்களுக்கு நிதிப் பரிமாற்றங்கள் நேரடியாகச் சென்றடைவதற்கான வழிகளை மேம்படுத்துவது, திவால் சட்டத்தின் சரியான செயலாக்கம், ஜி.எஸ்.டி மற்றும் பெருநிறுவன வரி சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துதல் ஆகியவை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்களாகும்.