"ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்.! அமைச்சர் செங்கோட்டையன் சூசகம். -செய்தி
__________

அன்புள்ள தோழா!

எந்த கனவு நிறைவேறும்.?

'நீட்' டால் தகர்ந்த 'படித்தால் உயரலாம்' என்று போதித்த  ஆயிரமாயிரம் ஆசிரியர்களின்  நம்பிக்கை?

மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய புத்தகங்கள் உருவாக்கப்பட்ட எதிர்நோக்குகள்?

எந்த கனவு?

உலக தரத்தில் தமிழகம் வளர முன்னோர்கள் மேற்கொண்ட உழைப்பின் பலன்களை தமிழக மக்களுக்காகவே போர்க்குணத்தோடு பாதுகாக்கும் ஆட்சி..?

இருபது ஆண்டுகளாக நம்பி நம்பி ஏமார்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்..?

எந்த கனவு..?

2004 க்கு பிறகு பணியேற்ற ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம்.?

ஏழாவது ஊதியக் குழுவில் இழந்த 21 மாத நிலுவைத்தொகை..?

'அஞ்சாங்கிளாஸ் வாத்தியாருக்கு எண்பதாயிரமா..' என்ற எள்ளல் பேச்சால் ஏற்பட்ட அவமரியாதை..?

எந்த கனவு..?

'எமிஸ்' நெருக்கடியிலிருந்து விடுதலை; 'பயோமெட்ரிக்' பதற்றமில்லாத பணித்தலங்கள்.?

புதிய கல்விக் கொள்கையின் அவல சூட்சுமங்களை அறிந்து தமிழக பள்ளிக்கல்வித் தரத்தை உயர்த்தும் அறிவார்ந்த அமைச்சு..?

எந்த கனவு நிறைவேறும்..?

ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கனவா..?

'தொடக்கக் கல்வித்துறை மீண்டும் உருவாக்கப்பட்டது' என்ற கனவா..?

மத்திய அரசிடம் இருந்து மீண்டும் மாநில அரசுக்கே கல்வித்துறை வந்து சேர்ந்தது என்ற கனவா.?

எந்த கனவு தோழர்.?

நீங்கள் எங்கள் துறை அமைச்சர்.! நம்புகிறோம்.

நீங்கள் 12 கோடி தமிழ் மக்களின் எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகளின் தலைவன்.! எனவே உங்கள் வார்த்தைகளை மிகவும் மதிக்கிறோம்.!

ஆனால்
இலட்சக்கணக்கான அரசூழியரும் ஆசிரியர்களும் அடுத்தடுத்து பல கட்டமாக, பல ஆண்டுகளாக போராடி, இறுதி கட்டத்தை அடைந்த தருணம்,

இரும்புக்கரம் கொண்டு அடக்கிய போதும்,

பேச்சுவார்த்தை நடத்த முன்வரவே வராத போதும்,

'வாராத வார்த்தைகள்'

அடுத்து வரும் 'உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகளை கருத்தில் கொள்ளாமல் உண்மையாகவே ஆசிரியர்கள் மேல் கொண்ட கருணையால் உதிர்க்கப்பட்டன' என்று மனதில் பதிய மறுத்து அடம்பிடிக்கின்றன.

ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து நாள்முதலாக ஆசிரியர்களை சொந்த ஊரில் விரோதிகளாக்கிடும் போக்கில் விமர்சனங்களை முதல்வர் உட்பட எல்லா சக அமைச்சர்களும் வசைமாரி பொழிந்த போது வாராத வார்த்தைகள், தற்போது எந்த எதிர்ப்பார்ப்புமின்றி  உதிர்க்கப்பட்டன என்று ஏற்க அறிவு மறுக்கிறது.

காலம் மாறும்.
காட்சிகள் மாறும்.

தமிழ்நாடு தலைநிமிரும்.!

ஆனால்
அது

நெடிய பொறுமையும், நேரிய வாழ்வியலும், கடின உழைப்பும், திண்ணிய கொள்கையும் கொண்ட வருங்கால தலைமுறையால்தான் அமையும்.

அது வரை ஆசிரியர் சமூகம் பழுக்க பழுக்க காய்ச்சிய இரும்பைப்போல இந்த சமூகத்தை அடித்து படித்துக்கொண்டே இருக்கும்!

நாமார்க்கும் குடியல்லோம்!

அவநம்பிக்கைகள் அறியாமையின் குழந்தைகள்!

ஆ.செல்வம்.