பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும் : மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பேச்சு.

புதுக்கோட்டை,அக்15:பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி பேசினார்.

பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்தும் 47 வது ஜவஹர்லால் நேரு வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் ,கணித,சுற்றுப்புற கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழா,கணித கருத்தரங்கம் புதுக்கோட்டை திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பேசியதாவது:
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான இன்று பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து திறன்களை கொண்டுவரவும்,தலைமைப்பண்பு,குடிமைப்பண்பு ,அறிவியல் சார்ந்த ஆரோக்கியமான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,மாணவ பருவத்திலேயே தொழில்நுட்பத்தினை ஆராய்ந்து கையாள தெரிந்து கொள்ளவும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

மேலும் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்கை ஊக்குவிக்கவும் இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் கல்வி மாவட்ட அளவில் நடத்தி முடிக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் படைப்புகளே இன்று வருவாய் மாவட்ட அளவிலான போட்னிகளில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியில் இலுப்பூர்,புதுக்கோட்டை,அறந்தாங்கி ஆகிய கல்வி மாவட்டத்தில் உள்ள 28 பள்ளிகளின் 84 படைப்புகளும்,13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 13 படைப்புகளும் என மொத்தம் 97 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலிருந்தும் முதல் மூன்று  படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.எனவே பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இது போன்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும்.
நமது தமிழக அரசும் ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு தேவையான ,மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையானது என்ன என்பதை உணர்ந்து செயல்படுத்தி வருகிறது.மேலும் மாணவர்களின்  வாழ்க்கையில் பள்ளிக் கூடம் மட்டும் அல்லாமல் அங்குள்ள ஆசிரியர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.எனவே மாணவர்கள் ஆசிரியர்களையும் தாங்கள் கல்வி பயிலும் பள்ளியையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வரவேற்றுப் பேசினார்.
கண்காட்சியில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ.இராகவன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு. திராவிடச் செல்வம் மற்றும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேல்,மாவட்ட உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கபிலன்,ஜீவானந்தம்  மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,வீ.ஆர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வியின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில் மாணவர்கள் நிலையான விவசாய நடைமுறைகள்,தூய்மை மற்றும் சுகாதார ஆரோக்யம்,வள மேலாண்மை,தொழில்துறை வளர்ச்சி,எதிர்கால போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு,கல்வியில் விளையாட்டுகள் மற்றும் கணித மாதிரிகள், ஆகிய தலைப்பில் கீழ் மாணவர்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில் உணவு ,வாழும் உயிரினங்கள்,நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்கள் ,மக்கள் சிந்தனைகள்,வேலை எப்படி செய்கிறது,இயற்கை வளங்கள் ,இயற்கைக் கணிதக் கூறுகள்,பயன்ற்ற பொருட்களைப் பயன்படுத்தி கலைப்பொருட்கள் தயாரித்தல்,கார்ட்டூன் வரைதல் ஆகிய தலைப்பின் கீழ் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

முடிவில் திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்   ஜோஸ்பின்மேரி நன்றி கூறினார்.