*அன்னை மொழியே அழகான செந்தமிழே*

*இலக்கணம் பற்றிய ஓர் உரையாடல் - 3*

முந்தைய பதிவில் நான் கேட்ட கேள்வி:
கீழுள்ள தொடர்களில் எழுவாயை எடுத்து எழுதுக.

அ) சங்கீதா அம்மா ஊருக்குச் சென்றாள்.
ஆ) சுமதிக்குப் பாட்டுப் பிடிக்கிறது.

முதல் தொடர்:
யார் அல்லது எது என்ற கேள்விக்கு விடையாக வருவதே எழுவாய். எழுவாய் உருபு ஏற்காது. இத்தொடர் உருபு இல்லாத தொடர்போலத்தான் தோன்றுகிறது.

யார் சென்றாள்? என்ற கேள்வியை முன்வைப்போம்.

சங்கீதா அம்மாவுடைய ஊருக்குச் சென்றாள். (எழுவாய் – சங்கீதா)

சங்கீதாவின் அம்மா ஊருக்குச் சென்றாள். (எழுவாய் – அம்மா)

சங்கீதா(அ)ம்மா ஊருக்குச் சென்றாள். (எழுவாய் – சங்கீதாம்மா)

இரண்டாம் தொடர்:
சுமதிக்குப் பாட்டுப் பிடிக்கிறது – இத்தொடரின் எழுவாய்? சுமதியா? பாட்டா?
பயனிலையிலிருந்து வருவோம்.

பயனிலை – பிடிக்கிறது.
யார் அல்லது எது என்ற கேள்வியை அதனுடன் பொருத்துவோம்.
யார் பிடிக்கிறது? – இக்கேள்வி பொருத்தமில்லை. யார் என்னும் உயர்திணைக்கு அஃறிணை வினைமுற்று வராது.
யாருக்குப் பிடிக்கிறது? என்ற கேள்வியே சரி. ஆனால் கேள்வியில் ‘கு’ வேற்றுமை வருகிறது. எனவே சுமதி என்னும் சொல் எழுவாய் இல்லை!

எது பிடிக்கிறது? பாட்டுப் பிடிக்கிறது.
அ! இதுதான் எழுவாயா? இல்லை!
பாட்டைப் பிடிக்கிறது என்று இத்தொடர் ‘ஐ’ வேற்றுமையை ஏற்கிறது. எனவே பாட்டும் எழுவாய் இல்லை.

என்றாலும் பிடித்தல் என்ற தொழிலுக்கு உரியவள் சுமதி. எனவே சுமதிக்கு என்பதை எழுவாயாகக் கொள்ளமுடியுமா?
இத்தொடரை எழுவாய் இல்லாத தொடர் என்று கொள்ளுதலே சிறப்பு.
--**--

*வேற்றுமை பாராட்டுவோம் – 3*

*இரண்டாம் வேற்றுமை*

இரண்டா வதன்உருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி யாகும்.  (நன்னூல் – 296)

இரண்டாம் வேற்றுமையின் உருபு – ஐ. அது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய பொருள்களில் வரும். தன்னை ஏற்ற பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும்.

செயப்படுபொருள் என்பது, எழுவாய் அல்லது கருத்தா செய்யும் வினையின் பயனை ஏற்கும் பொருள். எதை அல்லது யாரை என்ற கேள்விக்கு விடையாக வரும் பொருளாக அமையும்.
பரமேசுவரி உப்புமாவைத் தாளித்தாள். (எதைத் தாளித்தாள்?)
பரமேசுவரி மணிகண்டனைத் தாளித்தாள். (யாரைத் தாளித்தாள்?)

செயப்படுபொருளைச் செய்பொருள் என்றும் கருமம் என்றும் கூறுவர்.

செந்தில் வீட்டைக் கட்டினார். (ஆக்கல்)
செந்தில் வீட்டை இடித்தார். (அழித்தல்)
செந்தில் வீட்டை அடைந்தார். (அடைதல்)
செந்தில் வீட்டைத் துறந்தார். (நீத்தல்)
செந்தில் சுறுசுறுப்பில் தேனியைப் போன்றவர். (ஒத்தல்)
செந்தில் நிலைகலங்காத உள்ளத்தை உடையவர். (உடைமை)

நன்னூலார், ‘ஐ’ வேற்றுமைப் பொருள்களை உரைக்கையில்,
‘ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆதியாகும்’ என்கிறார்.

‘ஆதி’ என்று கூறுவதன்மூலம் செயப்படுபொருளுக்கு மேலும் விரிந்த பொருள்களைக் கொள்ளமுடியும்.

செந்தில் மனைவியை நேசித்தார்.  (நேசித்தல்)
செந்தில், கவுண்டமணியை மதித்தார். (மதித்தல்)
செந்தில் உரையை நிகழ்த்தினார். (நிகழ்த்துதல்)

இவ்வாறு  வரும் செயப்படுபொருள்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

*‘ஐ’ வேற்றுமை விரியும் தொகையும்*

பால் குடித்தான். (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
பாலைக் குடித்தான். (இரண்டாம் வேற்றுமை விரி)
மேலுள்ள தொடர்களை விரித்தாலும் தொகுத்தாலும் பொருள்களில் மாற்றமில்லை.

இட்டலி உண்டான்.
இட்டலியை உண்டான்.
முதல் தொடர் இட்டலியுடன் வேறு பண்டங்களையும் உண்டான் என்ற பொருளைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இட்டலியை மட்டும் உண்டான் என்ற பொருளைக் குறிக்கிறது.

கணவன் தேடுகிறாள்.
கணவனைத் தேடுகிறாள்.
முதல் தொடர் திருமணமாகாத பெண் தனக்குப் பொருத்தமான கணவனைத் தேடுகிறாள் என்ற பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர் திருமணமான பெண் தன் கணவனைக் காணாமல் தேடுகிறாள் என்ற பொருளைத் தருகிறது.

‘ஐ’ வேற்றுமை, பொதுவாகச் சொல்லும்போதுத் தொகையாகவும் குறிப்பிட்டுச் சொல்லும்போது விரிந்தும் வருவதை நாம் பார்க்கலாம்.

*இன்றைய கேள்வி*
(அ) முதனிலைத் தொழிற்பெயர்
(ஆ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
(இ)முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்
(ஈ)விகுதி பெற்ற தொழிற்பெயர்
ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
குறிப்பு: ஆர்வமிகுதியில் ஒருவரே பல பதிவுகள் இடவேண்டா. சிந்தித்து எழுதிவைத்துக்கொண்ட பிறகு தட்டச்சுச் செய்யுங்கள். அ முதல் ஈ வரையுள்ள அனைத்துத் தொழிற்பெயர்களுக்கும் தலைப்புவாரியாக ஒரே பதிவில் விடைகளைப் பதிவிடுக.

*ஹரிகுமார்*